புதிய அரசியல் காட்சிகளை பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அழைப்பு!

இலங்கையில் புதிய அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாகத் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான கட்சிகளின் பதிவுகளை மேற்கொள்வதற்காகத் தகுதியுள்ள தரப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கும் காலம்:

புதிய கட்சிகளைப் பதிவு செய்ய விரும்புவோர் 2026 ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி வரை தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்:

விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களைத் தனித்தனி கோப்புகளாகச் சமர்ப்பிப்பது அவசியமாகும்:

  • கட்சியின் யாப்பு மற்றும் தற்போதைய கொள்கைப் பிரகடனம்.
  • கட்சியின் உத்தியோகத்தர் குழாம் பட்டியல்.
  • கடந்த நான்கு வருடங்களாகப் பெண் உத்தியோகத்தர்கள் வகித்த பதவிகள் குறித்த விபரங்கள்.
  • கடந்த நான்கு வருடங்களுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கைகள்.
  • கட்சி ஒரு அரசியல் அமைப்பாகக் கடந்த 4 வருடங்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்.
  • அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களில், கட்சி எதிர்பார்க்கும் சின்னம் குறித்த தெளிவான விபரம்.

விண்ணப்ப நடைமுறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் கட்சியின் செயலாளரின் கையொப்பத்துடன், ‘தலைவர், தேர்தல் ஆணைக்குழு, சரண மாவத்தை, இராஜகிரிய’ என்ற முகவரிக்குத் தபாலில் அனுப்பலாம் அல்லது நேரடியாகச் சென்று கையளிக்கலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பம் – 2026’ எனக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.

பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் கிடைக்கும் எந்தவொரு விண்ணப்பமும் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல் ஆணைக்குழு கண்டிப்பான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. விண்ணப்பப் படிவங்களைத் தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளம் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!