
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனியார் ஊடகம் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு தனது அரசியல் பயணம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து முதல்முறையாக விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.
சினிமா டூ அரசியல்:
தமது 33 ஆண்டு கால வெற்றிகரமான சினிமா வாழ்க்கையை விட்டு விலகுவது என்பது எளிதான முடிவாக இருக்கவில்லை எனத் தெரிவித்த விஜய், இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று குறிப்பிட்டார். குறிப்பாக கொரோனா காலத்திற்குப் பிறகு அரசியலுக்கு வருவது குறித்துத் தீவிரமாக ஆலோசித்ததாகவும், தற்போது அரசியல்தான் தனது எதிர்காலம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நீண்ட கால பயணம்:
தனது அரசியல் பயணம் ஒரு குறுகிய கால முயற்சி அல்ல, அது ஒரு நீண்ட காலப் பயணம் என அவர் வர்ணித்தார். எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்தவே தான் அரசியலில் களமிறங்கியுள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கரூர் சம்பவம் குறித்து உருக்கம்:
அண்மையில் கரூரில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்கள் குறித்து விஜய் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். “கரூர் சம்பவம் எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது, அது தற்போது வரை என்னைத் துரத்திக் கொண்டிருக்கிறது” என அவர் உருக்கமாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை ஜீரணிக்கத் தனக்குக் கூடுதல் நேரம் தேவைப்பட்டதாகவும், அதனாலேயே உடனடியாக எதிர்வினையாற்றவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
நிதானமான அணுகுமுறை:
எல்லாவற்றிற்கும் உடனடியாகப் பதில் அளிக்காமல், எதனையும் முழுமையாகப் புரிந்துகொண்டு நிதானமாகச் செயல்படுவதே தனது பாணி எனத் தெரிவித்த விஜய், தமிழக அரசியலில் தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தினார்.