உணர்வுகளின் விடுகதை - 19
(தொடர்கதை EP 19)

தையல் இயந்திரங்களை வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட சுமார் 300 application கள் ரமீஸிடம் தரப்பட்டது.
“மொத்தமா எத்தன வந்திச்சு brother?”
என பிரதேச பொருப்பாளரிடம் கேட்டான் ரமீஸ்.
“இதுல select ஆக்கின 320 தான் இருக்கு. மொத்தமா 500 சொச்சம் வந்திருக்கும். அதையும் தரவா brother?”
என அந்த பொறுப்பாளர் கூறியதும்…..
“No இத பாத்திட்டு தேவைன்னா கேக்கிறன்!”
என்றான் இவன். இவனுக்கு தேவை அந்த எழுந்துள்ள application மட்டும் தான். அதுதான் அவனது வாழ்க்கையை உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் நடுவில் விட்டுச்சென்ற ரைஹானாவின் கையெழுத்து. அந்த நாலரை வருடங்களில் அவன் நிறையவே பக்குவப்பட்டிருந்ததால் இப்போது அவனுக்கிருந்தது காதல் அல்ல மிகப்பெரிய குற்றவுணர்வு.
‘தேடிக் களைத்த கண்களில்
ஒரு பசுமையின் தரிசனம்!
அறுந்துபோன தவறுகளின் மீது
சரிசெய்ய ஒரு அர்த்தமுள்ள
முற்றுப் புள்ளிக்காகவா?’
என்ற கவிதையை கூட அவன் அந்த கண்கள் சந்தித்து மறைந்த பொழுதில் எழுதியிருந்தான். ஒவ்வொரு application ஆக பார்த்து பார்த்து வந்த பொழுது அவனது தேடலில் அர்த்தம் கிடைத்தது. அதே எழுத்து! அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்த கடிதத்துடன் சரிபார்த்த பின் 100 வீதம் ஒத்துப்போவது தெரிந்ததும் காத்திருந்த சந்தோசம் அவனுக்குள் மறுபடி உயிர்கொண்டதாக ஓர் உணர்வு. ஆனால் அந்த application ல் இருந்த விபரங்களில் அவன் எதிர்பார்த்த எதுவும் இல்லை. நிஹாரா அப்துல் கரீம் என்ற பெயரில் விண்ணப்பிக்க பட்டிருந்தது.
“Brother! இந்த application ல address பண்ணியிருக்கிற வீடு ரொம்ப தூரமா?”
என அந்த பொறுப்பாளரிடம் கேட்க அவர்….
“முன்னுக்கு இருக்கிற Main road ல left ல திரும்பி ஒரு 2km போனா right ல ஒரு welding shop வரும். அத்தோட சேர்த்து ஒரு lane போகும், அதுல right ல ஆறாவது வீடு. சம்சுதீன் ஹாஜியாரோட store ல இருந்து Accident பட்ட கரீம் நாநான்னு கேட்டா சொல்லுவாங்க.”
என்றார். ‘Some thing wrong நான் தேடுறதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கிறது போல் தெரியல. நடந்தது ஒரு கற்பனை உணர்வு’ என அவனது புத்தி சொன்னாலும் உணர்வு தேடிப்பார் என்றது. புத்திக்கும் உணர்வுக்கும் நடக்கும் போராட்டத்தில் கடந்த கசப்பான அனுபவங்கள் புத்திக்கே முதலிடம் கொடுக்க அவனை தூண்டினாலும் இப்போதும் உணர்வு அசாதாரணமாக ஜெயித்தது.
‘அதே கையெழுத்து ஆனால் family information wrong! எதுவாயிருக்கும்? Some times நான்தான் குழப்பத்தில் இருக்கிறேனா?’ இப்படி யோசித்தவாறு உணர்ச்சியின் போக்கில் அந்த முகவரியை தேடி புறப்பட்டான் ரமீஸ். அந்த ஆறாவது வீட்டின் முன் அவனது bike நின்றதும் வீட்டு number ரை சரி பார்த்தான். வீதியில் வந்த ஒருவரிடம் ஸலாம் சொல்லிவிட்டு பதில் வந்ததும்
“சம்சுதீன் ஹாஜியாரோட store ல Accident பட்ட…”
என்றபோதே….
“கரீம் நாநாட வீடா? இதுதான் தம்பி”
என அதேவீட்டை அவர் காட்டிவிட்டு செல்ல…
“ஜஷாகல்லாஹு ஹைர்”
என்று கூறி விட்டு இவன் சென்று அழைப்பு மணியை அழுத்தினான். இரண்டாவது அழைப்புக்கு கதவு திறந்து யாரது என்று கேட்டது ஒரு பெண்மணி. வயது 45ற்குள் இருக்கும் இவன் ஸலாம் சொன்னதும் பதிலும் கிடைத்தது. பிறகு அந்த பெண்மணி….
“நீங்க அந்த center ல தையல் machine குடுத்த நிகழ்ச்சீல…”
என்றபோதே இவன்…
“ம்ம்ம் ஆமா அதுல ஒரு சின்ன தகவல் தெரிஞ்சுக்கணும் அதான் வந்தேன்.”
என்றான். உடனே அவர் கதவை முழுதாக திறந்து வாங்க என உள்ளே அழைத்தார். நேர்த்தியான வீடு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு நடுத்தர குடும்பத்துக்குறிய சகல அடையாளங்களும் தெரிந்தது.
“உக்காருங்க தம்பி”
என்றுவிட்டு….
“அந்த Accident க்கு பிறகு அவரும் படுத்த படுக்கையாகிட்டாரு. ஆனா சம்சுதீன் ஹாஜியாருக்கு அல்லாஹ் மென் மேலும் நிறைய கொடுக்கனும். மாசம் தவறாம அவரோட சம்பளத்த அனுப்புறதோட அவரோட மருந்து செலவையும் என் பிள்ளைங்களோட படிப்பு செலவையும் அவரே பொறுப்பெடுத்து செய்றாரு!”
என்று கூற அவன்…..
“அப்படின்னா அந்த சுய தொழில் தொடங்க ஏன் அந்த application போட்டீங்க?”
என்ற இவனது கேள்விக்கு….
“சரியான கேள்வி தான் தம்பி என்ன இருந்தாலும் சுயமா உழைச்சு சாப்பிடுறது மாதிரி இல்லம்மா நடந்த விபத்துக்காக ஹாஜியார் மேல தவற போட்டு அவருகிட்டயே வாங்கிட்டு வாழ்றது சரியா இல்லைன்னு என் மூத்த மக சொல்லிச்சு. அதான் ஏதாவது சுயமா தொடங்கலாம்னு விண்ணப்பத்த போட்டோம்.”
என்றார் அந்த பெண்மணி.
“உங்க மூத்த மகள் எங்க இருக்காங்க என்ன செய்றாங்க?”
என்ற இவனது கேள்விக்கு….
“இவரோட சம்பவத்துக்கு பிறகு அவளுக்கும் ஒரு பொறுப்பான பதவிய கொடுத்து அதே garment ல வேல கொடுத்து இருக்காங்க; அவளுக்கு அதுல இஷ்டமில்ல! ஆனா ஹாஜியாரோட மனச உடைக்கிறது சரியில்லை என்றதுக்காக ஆறுமாசமா போறா. இந்த சுய தொழில் விசயம் சரிவந்தா வீட்டோட இருந்து முன்னேறலாங்கிறது அவளோட தன்னம்பிக்கை. அதைத்தான் கெளரவமா நினைக்கிறா!”
என அவர் கூறவும்….
“இன்னொரு சின்ன கேள்வி அந்த application யாரு நிறைச்சது?”
என்றது ரமீஸின் அடுத்த கேள்வி மூலம். கிட்டத்தட்ட சுற்றி வளைத்து அவனுக்கு தேவையான point க்கு வந்தும் விட்டான்.
” அதுவா அது ரைஹானா madam தான் அவரோட கையாள நிறைச்சு தந்தாங்க!”
என்று அவர் கூறியபோது அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனான் ரமீஸ்.
“ரைஹானா….?”
என்பதற்கப்பால் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.
“ரைஹானா madam தான் சம்சுதீன் ஹாஜியாரோட மனைவி. அன்னைக்கு உங்க நிகழ்ச்சிக்கு கூட வந்திட்டு பாதியில ஏதோ வேலை இருக்குன்னு போயிட்டாங்க. மாசம் ஒருதடவை எங்கள பார்க்க வருவாக. சாச்சி சாச்சா ன்னு தான் எங்கள கூப்பிடுவா. மகள் மின்ஹா கூட ரொம்ப பிரியம். அவங்க தான் இதுமாதிரி School காலத்தில் நிறப்பினதுக்கு இன்னும் நிறப்பல என்டு எங்ககிட்ட விபரம் கேட்டு நிறப்பினா!”
என அந்த பெண்ணே சொன்னபின்னும். அதிர்ச்சியில் இருந்தான் ரமீஸ்.
தொடரும்...
எம்.யூ.ஏ.ரஹீம்.