உணர்வுகளின் விடுகதை - 12
(தொடர்கதை EP 12)

அந்த Surprise கடிதத்தின் எதிர்பார்ப்பு ஒரு tension மிக்க பிரயாணத்தை ரமீஸிற்கு ஏற்படுத்தியது. Bus ல் வைத்தே அதை படித்துவிட மனசு சொன்னாலும் அது அவனுக்கு சரியாக படவில்லை. வீட்டுக்கு சென்றபோது இஷா பிந்திவிட்டது. அவனது பதற்றம் அவனையே ஆச்சரியப்படுத்தியது! அவசரமாக ஒரு குளியல் போட்டுவிட்டு அவனது room ற்கு சென்றான். வழமைக்கு மாற்றமாக Express வேகத்தில் தொழுதுவிட்டு, அந்த கடிதத்தையும் சிறிய sweet பார்சலையும் எடுத்து sweet பார்சலை மேசையில் வைத்து விட்டு கடிதத்துடன் கட்டிலில் சென்று சாய்ந்தவாறு பிரித்தான். அழகான முத்துமுத்தான எழுத்துகளில் புன்சிரிப்புடன் ரைஹானாவே அவனுக்கு முன்னால் இருப்பதுபோல் இருந்தது. ஏதோவொன்று உள்ளத்தை தூண்ட அந்த கடிதத்தின் எழுத்துக்களை மென்மையாக வருடினான்!!!!! அந்த எழுத்துக்கள் இவ்வாறு பேசியது…..
‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…..
என் நம்பிக்கைக்குறியவருக்கு,
நேரடியாக உங்களை சந்தித்து பேசும் தைரியம் இல்லாததால் இந்த கடிதத்தை எழுதுகிறேன். சந்தித்து பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக உங்கள் தங்கை கூறியும் எனது இயல்புநிலை அதற்கு இடம் தரவில்லை. மன்னிக்கவும். அதனால் கடிதம் எழுதி தருவதாக கூறினேன். கல்யாண வீட்டில் உங்களை சந்தித்தபோது உங்கள் மீது நேசமோ உங்களை விரும்பும் மனோ நிலையோ எனக்கு இருக்கவில்லை. ஆனால் பெண் சகோதர உறவை கண்ணியமாகவும் நேர்மையான அன்புடனும் பாவிக்கும் மேலான உங்கள் நடத்தை மீது நான் கவரப்பட்டேன். அதுவே உங்களை எனக்குள் தனித்துவம் மிக்கவராக அடையாளப்படுத்தியது. ஆண்கள் என்றால் இப்படித்தான் என சிறுவயதில் என் தந்தை என் தாயின் மூலமாக செயலில் காட்டியபோது பெண் என்பவளின் வாழ்க்கையே அர்த்தமற்றதாக என் மனதில் பதிந்தது. திருமணம் என்பதே அடிமைகளை கைமாற்றும் நிகழ்வு போன்றது என எண்ணிக் கொண்டேன்.
எனது தாய்மாமன் மற்றும் சில்மியாவின் தந்தை போன்றோரை அவதானித்தபின் அந்த முடிவை மறுபரிசீலனை செய்தாலும், அந்த வீட்டு பெண்கள் விதிவிலக்கான பாக்கியசாலிகள் என்பதை தவிர வேறு முடிவுக்கு வரமுடியவில்லை. அந்த விதிவிலக்கின் பாக்கியம் எனக்கு கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வது தவிர வேறுவழியும் தெரிந்திருக்கவுமில்லை. இதையெல்லாம் கொட்டி தீர்த்து ஆறுதலடையும் ஒரே உயிர் நண்பி சில்மியா விளையாட்டாக சொன்னதுதான்….. நீ எனக்கு மைனியாகிவிடு என்பதாகும். அப்போதும் கூட சலீம் Sir ன் class ல் சந்தித்த நீங்கள் தான் அவளின் பெரியம்மா மகன் என்பது வல்லாஹி எனக்கு தெரியாது. ஒரு ஆறுதலுக்காக அவள் சொன்ன வார்த்தை உங்களை தேடிப்பார்க்கும் அளவுக்கு எனக்கு ஆர்வத்தை முதலில் ஏற்படுத்தவில்லை. ஆனால் பஸ்லியா தாத்தாவின் திருமண வீட்டில் உங்களை பார்த்ததும் நான் அடையாளம் கண்டு கொண்டு இது யாரென சில்மியாவிடம் கேட்டேன். அவளும் மறுபடியும் விளையாட்டாக ‘உன்னை எங்கள் வீட்டுக்கு மைனியாக கொண்டுவர இருக்கிற எங்கள் நாநா’ என்று சொன்னபோதும் கூட பெரிதாக ஆர்வம் வரவில்லை. ஆனால் உங்களை தேடிப்பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின் எனக்குள் சில மாற்றங்களை நீங்கள் உங்களது மேலான செயல்கள் மூலம் ஏற்படுத்தி விட்டீர்கள்.
ஆகவே வெட்கத்தை விட்டு சில்மியாவிடம் எனது மனோநிலையை சொன்னபோது அவள் சொன்ன ஒரே வார்த்தை Welcome to our family my dear மைனி என்பதுதான். அந்த ஆறுதல் மிக்க வார்த்தைகள் அவளது தோளில் சாய்ந்து அழவைத்தது. அவள் பெரிய மனிசி போல பேசியது மட்டுமில்லாமல் அந்த ஒரு சில நாட்களுக்குள் எனக்கே எனக்கானவராக உங்களை பார்க்கும் அளவுக்கும் என்னை மாற்றியும் விட்டாள்! இன்னும் வீட்டு பெரியவர்கள் எமது நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிக்குமளவுக்கு கொண்டு வந்ததிலும் அவளது பங்கு குறைத்து மதிப்பிட முடியாதது. ஆனால் இப்போது இன்னொரு பெரிய பூகம்பம் எமக்கு முன்னால் காத்திருப்பதுபோல் தெரிகின்றது. அது எனது வாப்பா….
அவருக்காக எனது நம்பிக்கை நிறைவேறும் சந்தர்ப்பத்தை இழக்க நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் வீட்டில் அவரை எதிர்த்து போராடும் தைரியமும் மனோவலிமையும் எனக்கில்லை. அதேநேரம் நீங்கள் கைநீட்டி அழைத்தால் வேறெதையும் பற்றி கவலை படாமல் வரும் ஆர்வம் இருக்கின்றது. ஏனென்றால் நீங்கள் தான் எனது ஒரே நம்பிக்கை.
இப்படிக்கு
ரைஹானா.
என முடிக்கப்பட்டிருந்தது. கடிதத்தை வாசித்த ரமீஸ் அவன் கட்டிக்காத்துவந்த நீதி நேர்மை நியாயம் எல்லாவற்றையும் விட்டாவது அவளது நம்பிக்கைக்கு உதவு என்பதுபோல அந்த கடிதத்தின் எதிர்பார்ப்பு இருந்ததை புரிந்து கொண்டான். சிலநேரம் சாத்வீகமான வழிகள் சரிவராவிட்டால் அசாத்வீகமாக சரி என்னை மீட்டெடு என ரைஹானா சொல்வது போல் இருந்தது.
யா அல்லாஹ் சிக்கலை ஏற்படுத்தி விடாதே என்று பிரார்த்தனை செய்தவாறு அந்த sweet பார்சலை பார்த்தான்.
தொடரும்…
எம்.யூ.ஏ.ரஹீம்