மருந்து தரப் பரிசோதனையை வலுப்படுத்த சுகாதார அமைச்சின் புதிய திட்டம்

இலங்கையில் விநியோகிக்கப்படும் மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது தொடர்பாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

🧑‍⚕️கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்:

மருந்து தரப் பரிசோதனை நடவடிக்கைகளை முறையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுப்பது குறித்து இதன்போது முதன்மையாகக் கவனம் செலுத்தப்பட்டது. ஆய்வுகூடங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் பரிசோதனை அறிக்கைகளில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA) எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

🤵‍♂️அமைச்சரின் வழிகாட்டல்கள்:

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஆய்வுகூடங்களில் காணப்படும் சில மட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்காலத்தில் இந்நடவடிக்கைகளை மிகவும் விரிவான முறையில் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அதற்கான நிரந்தரத் தீர்வை எட்டச் சிறிது காலம் எடுக்கும் என்பதால், அதுவரை அரசாங்கத்தின் கீழுள்ள ஏனைய நிறுவனங்கள் ஊடாக தரப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மருந்து விநியோகச் செயல்முறைக்குத் தடையேற்படாத வகையில், சந்தையில் பிரச்சினைக்குரியவை எனக் கண்டறியப்படும் மருந்துகளின் தரப் பரிசோதனைகளுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதன்போது உத்தரவிட்டார்.

இக்கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், NMRA தலைவர் மற்றும்விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.