இலங்கையில் அண்மையில் வீசிய தித்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் பெரும் அளவிலான நிவாரணப் பொருட்களையும் நிதி உதவியையும் வழங்கியுள்ளனர்.
நெகிழ்ச்சியூட்டும் மனிதாபிமான உதவி:
தங்களின் தாயக உறவுகளுடன் உள்ள வலுவான பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக, இரண்டு 20 அடி கொள்கலன் (Containers) அளவிலான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் மற்றும் கணிசமான நிதி உதவியை இவர்கள் வழங்கியுள்ளனர். இந்த நிவாரணப் பொருட்கள் அனைத்தும் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
42 இலட்சம் ரூபாய் நிதிப் பங்களிப்பு:
பொருள் உதவிகளுக்கு மேலதிகமாக, முகாம் வாழ் இலங்கையர்கள் ஒன்றிணைந்து 12,33,604 இந்திய ரூபாய்களைத் திரட்டியுள்ளனர். இதன் இலங்கை பெறுமதி சுமார் 42,50,000 (நாற்பத்து இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்) ரூபாய்களாகும். கடினமான வாழ்வாதாரச் சூழலிலும், தாயக மக்களுக்காகத் தாங்களாகவே முன்வந்து இந்த நிதியை அவர்கள் வழங்கியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
துணைத் தூதரகத்தின் ஊடாக விநியோகம்:
நிவாரணப் பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வில் பெருமளவிலான இலங்கை சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த உதவிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கத் துணைத் தூதரகம் எடுத்த முயற்சிகளுக்கு அவர்கள் நன்றிகளைத் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவிகள் வெளிப்படைத்தன்மையுடன் சென்றடையும் என்பதில் இலங்கை அரசாங்கத்தின் மீது தங்களுக்குப் பூரண நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முகாம் வாழ் மக்களின் பின்னணி:
தமிழ்நாடு முழுவதும் உள்ள 106 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 60,000 இலங்கையர்கள் வசிக்கின்றனர். அத்துடன் 40,000 பேர் முகாம்களுக்கு வெளியே வசித்து வருகின்றனர். இடம்பெயர்வின் சவால்களை எதிர்கொண்டு வாழும் இச்சமூகத்தினர், இலங்கையில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் கூட்டாக இணைந்து திரட்டிய இந்த உதவி, இரு நாட்டு உறவுகளுக்கு இடையிலான மனிதாபிமானத்தை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.