தஜ்வீத் கலை ஓர் பார்வை
அல்குர்ஆன் ஆரம்பமாக அதனை ஓதப்பட வேண்டிய உரிய முறையில் இறக்கப்பட்டது. அவ்வாறே காலம் காலமாக வாய்மொழி ரீதியாக அதே முறைகள் பேணப்பட்ட நிலையில் குர்ஆன் படித்துக் கொடுக்கப்பட்டும், படிக்கப்பட்டும், ஓதப்பட்டும் வந்தது. அதன் பிற்பட்ட காலங்களில் அம்முறைகள் எழுத்துருவாக்கம் செய்யப்பட்டது.
தஜ்வீத் கலை முதன் முதலில் உருவாக்கியவர், நூலுருப் படுத்தியவர் போன்ற விடயங்களிலே பல்வேறு கருத்துக்கள் காணப்படுவதனால் ஒருவரை மட்டும் குறிப்பது சிரமமானதாகும். அத்தோடு அவ்விடயத்தில் அபுல் அஸ்வத் அத்துவலி என்பவருடைய பெயர் பிரபல்யமாக காணப்படுகிறது.
என்றாலும் جودوا القرآن وزينوه بأحسن الاصوات அல்குர்ஆனை மிகச் சிறந்த முறையில் ஒதுங்கள் இன்னும் அழகிய தொனியில் அதனை ஓதி வாருங்கள். என்ற இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அந்த உபதேச கருத்தின் அடிப்படையில் தஜ்வீத் என்பது சஹாபாக்கள் காலத்திலேயே காணப்பட்ட ஒரு கலை என்பதாகவும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
எனவே மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களின் மூலம் குறித்த ஒரு முடிவுக்கு வருவதை காட்டிலும் அல் குர்ஆன் ஸஹாபாக்கள் காலம் தொட்டே முறை பேணி ஓதப்பட்டு வந்திருக்கின்றது என்பது தெளிவாகிறது. எனவே அம் முறைகள் இன்று எமக்கு எழுத்துருவிலும் வாய்மொழி ரீதியாகவும் தஜ்வீத் என்ற கலையின் பெயரால் போதிக்கப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனமான விடயமாகும்.
அதேபோல என் அருமை நண்பர்களே, தஜ்வீத் படிப்பது நாம் நினைப்பதை போல மிகவும் கஷ்டமான ஒரு விடயமல்ல. மாறாக அதனை உரிய முறையில் இலகுவான நடையில் படித்தால் அது மிக இலகுவாக மாறிவிடும். எனவே அது மௌலவிமார் , படிக்கும் , ஓதும் மாணவர்களுக்கு மட்டும் உரிய ஒன்றல்ல. ஆகவே பொதுமக்கள் உட்பட அனைவரும் மிகத்தெளிவாக விளங்கிக்கொள்ளும் வண்ணம் எமது இந்த இணையதளத்தில் நாம் கட்டங்கட்டமாக ஒவ்வொரு பாடமாக பதிவிடுவோம். எம்மோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.