சமாதான நீதவான் (JP) பதவிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் – அரசியல் சிபார்சுகளுக்கு முற்றுப்புள்ளி!

அரசியல் சிபார்சுகளுக்கு முற்றுப்புள்ளி! சமாதான நீதவான் (JP) பதவிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்

இனிவரும் காலங்களில் அரசியல் காரணங்களுக்காகச் சமாதான நீதவான் (Justice of the Peace) பதவிகள் வழங்கப்படமாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இன்று (06 மார்ச் 2026) நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறைகள்:

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சமாதான நீதவான் பதவியின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பின்வரும் சீர்திருத்தங்களை வெளியிட்டார்:

  1. 75 வயது எல்லை: சிக்கலான ஆவணங்களைப் படித்துப் புரிந்துகொள்வதற்குத் தெளிவான மனநிலையும் ஆரோக்கியமும் அவசியம் என்பதால், இனிவரும் காலங்களில் புதிய நியமனங்களுக்கான அதிகபட்ச வயது எல்லை 75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  2. அரசியல் நியமனங்களுக்குத் தடை: முன்னரைப் போல அரசியல் செல்வாக்கு அல்லது சிபார்சுகளின் அடிப்படையில் இந்தப் பதவி வழங்கப்படமாட்டாது. தகுதியின் அடிப்படையிலேயே நியமனங்கள் அமையும்.

  3. சுயவிபரக்கோவை புதுப்பித்தல்: ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சமாதான நீதவான்கள் தமது சுயவிபரக்கோவையை (CV) புதுப்பிக்க வேண்டும். இது கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகம் ஊடாக உறுதிப்படுத்தப்படும்.

  4. இலத்திரனியல் தரவுத்தளம் (Database): நாடு முழுவதும் உள்ள அனைத்துச் சமாதான நீதவான்களின் விபரங்களும் அடங்கிய டிஜிட்டல் தரவுத்தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு ஆவணத்தில் முத்திரையிடும் நபர் உண்மையான தகுதியுள்ள நீதவான்தானா என்பதைப் பொதுமக்கள் இலகுவாக உறுதிப்படுத்த முடியும்.

புகார் அளிக்க வசதிகள்: தவறிழைக்கும் அல்லது முறையற்ற வகையில் செயற்படும் சமாதான நீதவான்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய வாட்ஸ்அப் (WhatsApp), மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய விசேட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னர் நியமிக்கப்பட்டவர்களின் பதவிகளை உடனடியாக ரத்து செய்வது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், நீண்டகால அனுபவம் உள்ளவர்களைக் கருத்திற்கொண்டு தரவுத்தளப் பணிகள் முடிந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!