சில்லென்று ஒரு காதல்….!  05

சில்லென்று ஒரு காதல் - 05

(தொடர்கதை EP 05)


திருமணத்திற்கான நாட்கள் நெருங்கி கொண்டிருந்தது. காதலில் உள்ளங்கள் கலந்தபின்பு திருமணம் ஒரு சம்பிரதாயமாவது சகஜம்தானே? அதற்கு இடையிலான பிரிவின் நாட்களும் இருவருக்கும் முற்களாக குத்தியது. இன்னொருபக்கம் சம்பிரதாயமான திருமணத்தின் பின் அங்கு காதல் பூத்து காய்த்து கனி தராவிட்டாலும் அந்த வாழ்க்கையும் ஒரு மலட்டு சடங்காகிவிடும்; என்பதும் மறுப்பதற்கில்லை. தப்பாே சரியாே திருமணத்தின் முன் உள்ளம் சேர்ந்தபின்பு அதை திருப்திப்படுத்த காதலர்கள் நியாய தர்மம் பார்ப்பதில்லை. அப்படி பார்த்தால் பலரின் நியாமான நம்பிக்கை வேலிகளை அசால்ட்டாக மீறிவரும் அந்த காதல் கூட கேள்விக்குறி ஆகிவிடும். திருமணத்திற்கு முந்திய காதலை நியாயப்படுத்தும் எவராளும் அது வரம்பு மீறிய செயலென ஏற்க முடியாத ஒரே காரணம் இதுதான்.

பிரிவின் வலி சம்ஹாவை தேடி ரொஷானை புறப்பட தூண்டியது. “டேய் மச்சான் இன்னும் ஒரு கிழமை பொறுக்க ஏலாதாடா!?” என்ற நண்பனிடம் “நீ இப்பாே கார்ல ஏர்ரியா இல்லையா!” என ரொஷான் கூற ” ம் சொல்லி கேக்கிற ஆளா நீ” என்றவாறு ஏறி அமர்ந்தான் அவனது நண்பன் ராசிக். கார் பதுளை நோக்கி புறப்பட்டது. அவளது நினைவுகளை சுமந்த அந்த பயணம் கிலோ மீட்டர் கணக்கால் நெருங்க புத்துணர்ச்சியை கொடுக்க காரின் வேகம் அதிகரித்தது. ” பார்த்து ஓட்டுடா எங்கயாச்சும் கொண்டுபோய் செருகிட போறே!” என்ற போதே முன்னால் சென்ற வாகனம் இடம் தராமல் செல்ல ஒரு அசாதாரண வேகத்தில் அதை ஓவர் டேக் செய்தான் ரொஷான். அது எதிர்புறம் வந்த கண்டெய்னரில் மோதாமல் மயிரிழையில் தப்பியது கார். அந்த நிகழ்வு ஒரு நிதானத்தை கொடுக்க ஒரு ஓரமாக காரை நிறுத்தினான் ரொஷான். நண்பன் ராசிக் திக்பிரமை பிடித்து போயிருந்தான். 

சம்ஹா மனதில் மட்டும் என்னவாம்!? அவளும் ரொஷானை காண எடுக்காத முயற்சிகளில்லை. இடையில் சில தடவை போfனில் பேசினாலும் அதெல்லாம் நேரடி சந்திப்பின் ஆர்வத்தை தூண்டியது தவிர வேறு எதனையும் தரவில்லை. யூனிவர்சிட்டியை காரணம் கூறி அவள் இரு வாரத்துக்கு முன் அவள் புறப்பட்ட போது சம்பிரதாய காரணம் கூறி வீட்டில் தடுத்தது எரிச்சலூட்டி இருந்தது. “சமி உன்னை பார்க்கணும் போல இருக்கு”  என்று போfனில் ரொஷான் கூறிய வார்த்தைகள் எக்ஸ்ரா எமோசனாக மாற  பதறி தவித்தது அவளது உள்ளம். காதலின் தூண்டலில் இவள் எதிர்பார்க்கும் அதே இலக்கிற்காக நிதானம் தவறிய பயணத்தை மறுபடியும் ஆரம்பித்திருந்தான் மறுபக்கம் ரொஷான்.

“உனக்கு இப்போ என்னதான் அவசரம் சம்ஹா என்ன ஓடியா போயிறப்போறா? கொஞ்சம் கூட உன்கிட்ட நிதானமில்ல! நெக்ஸ்ட் வீக் கல்யாணம்டா இப்போ ஏன் இந்த தேவையில்லாத டென்சன்!” என்ற நண்பன் அட்வைசில் இருந்த உண்மை மெல்ல ரொஸானுக்கு புரிய காரை நிதானமாகவே ஓட்டினான். ” சரி சரி ஒரு நல்ல ஹோட்டலா பார்த்து நிறுத்துடா இதுக்கு மேல தாங்க ஏலா” என நண்பன் சொன்ன போதுதான் மாலை மூன்று மணி தாண்டியது தெரிந்தது. ” சாரிடா மச்சான்” என்றவனை ” க்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை நல்ல ஹோட்டலா பார்த்து விடுடா! உனக்கு பசிக்கலயாடா!?” என்ற நண்பனை பார்த்து ” முன்ன பின்ன லவ் பண்ணா தான் இந்த கெமிஸ்ரில்லாம் புரியும்” என்ற இவனது பதிலை கேட்ட நண்பன் ராசிக் ” ஜயா ஜீனியஸ்! மனேஜ்மன்ட் செஞ்சி நீங்க விஞ்ஞானி ஆனது போதும்! நீங்களே இப்பாே பெரிய பாடம்யா! லவ் என்ன கல்யாணமே வேணாம்னு முடிவெடுத்தாச்சு!” என பதில் சொல்லவும் அந்த ஹோட்டல் வரவும் சரியாக இருந்தது.

ரொஸானுக்கு மனதை நிறைத்த காதல் வயிற்றை காயப்போட அனுமதித்தது. ஒரு கூல்ரிங்ஸ் கூட அநாவசியமாகபட்டது. அப்போதுதான் வீட்டுக்கு கோல் எடுத்து தாயிடம் நாளை வருவதாக கூறினான். ஆனால் எங்கே போகிறாய் என்ற தாயின் கேள்விக்கு நண்பன் ஒருவனுக்கு வெடிங் கார்ட் கொடுக்க போவதாக கூறினான்! காதல் இப்படித்தான் பொய்களை கூட நியாயப்படுத்தும் தேவையானால் புனிதப் படுத்தும். நண்பன் சாப்பிட்டு முடிந்ததும் பில்லை கட்டிவிட்டு அங்கே அருகிலிருந்த சொப்பிங் காம்பிளாக்ஸ் ஏறி சம்ஹாவுக்கென சில பொருட்களை வாங்கி அங்கிருந்த ஒரு பள்ளியில் தொழுதுவிட்டு  மறுபடியும் புறப்பட நேரம் மாலை ஐந்தை தொட்டிருந்தது. எப்படியோ பதுளை போய் சேர ஏழுமணி தாண்டியது. ” மச்சான் இதுக்கு பிறகு சம்ஹா வீட்டுக்கு போறது குறிப்பா நீ போறது அவ்வளவு பொருத்தமா படல சோ இங்க கிட்டத்தில ரூம் போட்டு தங்கிட்டு காலனையில உங்க கச்சேரிய வச்சுகக்கலாம்” என்று ராசிக் கூறியதில் நியாயம் இருப்பதை உணர்ந்தான் ரொஷான். பதுளை நகரில் ஒரு வாடகை ரூமெடுத்தான் ரொஷான். 

குளிர்ச்சி நிறம்பிய காலநிலையின் பனிக்காற்றை ஆழ்ந்து சுவாசித்ததும் ஒரு அதீத திருப்தி கிடைத்தது. சுவாசத்தில் கலந்த மலை பூக்களின் இதமான வாசனை சம்ஹாவின் அருகிலிருக்கும் உணர்வை அவனுக்கு கொடுத்தது. அப்போது நேரம் இரவு பத்துமணி அங்கிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் சம்ஹாவின் வீட்டில் ஒரு பதற்றமும் குழப்பமும் சூழ்ந்திருந்தது. அவளது தந்தை இடிந்து போன நிலையில் முன் உட்கார்ந்திருக்க அருகிலிருந்த சிறிய தந்தையிடம் ” சாச்சா ஜெசீர பார்க்கத்தான் போயிருப்பாள் அவன் கிட்ட விசாரிச்சா….” என சம்ஹா சொன்ன போதே அவர் “ஏன்மா இவ்வளவு நடந்திருக்கு! இப்பதான் சொல்றீங்க!? அவனுக்கு இதெல்லாம் கல்லிவல்லி பத்தோட பதினொன்னு அவனையும் பிடிச்சு விசாரிச்சாச்சு அந்த மூதேவிக்கும் தெரியா எங்கிறான்!” என்ற போது அவளது கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. தங்கையின் விடயத்தில் இவர்களிடம் சொல்ல முடியாத இன்னொரு விடயமும் அவளின் உள்ளத்தை உறுத்தியது. அந்த கடிதத்தின் வாசகங்களை மறுபடி நினைவு படுத்தினாள் ‘எனது தவறுக்கு நானே முடிவை தேடிக் கொள்கிறேன் என்னை மன்னிக்கவும் ‘ என இருந்தது.

தொடரும்….

எம்.யூ.ஏ.ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!