சில்லென்று ஒரு காதல்….!  04

சில்லென்று ஒரு காதல் - 04

(தொடர்கதை EP 04)

நம்பிக்கை கொள்வதும் உள்ளம்! நம்பிக்கையை கொல்வதும் உள்ளம்! எல்லாவற்றுக்கும் விதி என்ற காரணத்தை மட்டும் சூடி ஆறுதல் படுவதும் உள்ளம். கண்களுக்கு தெரியாத ஏதோ ஒரு தீர்மானத்தை நோக்கி நாம் நகர்வது மட்டுமே வேடிக்கையான வாடிக்கை. ஆனால் கொண்டு வளர்த்து கொன்று விடுவது என்ற விதியின் பந்தயங்களில் சூழ்நிலைகள் மிக சுலபமாக எம்மை தோற்கடித்து விடுகிறது! அந்த தோல்வி ஆன்மாவின் ஆழம்வரை தாக்கியும் விடுகிறது. சம்ஹா என்ற சமியை வாழ்க்கையாக அமர்த்திய ரொஷானின் உள்ளத்தில் அதற்கு முன் அமர்த்தியகொள்கையின் உயிர் சற்று ஊசலாடியது! தீபமாக ஏற்றிய காதல் ஒளி கொடுக்காமல் நெடுநாள் இலட்சியங்களை சூழ்நிலையை காரணம் காட்டி எரிக்க நினைக்கும் போது காதலே கொள்கையாகி போனதை அவன் உணர்ந்தான். தன் நீண்ட நாள் கொள்கை கண்களுக்கு முன்போ சாகத்துடிப்பது அவனுக்கு வலித்து கண்ணீர் துளிகளை சமர்ப்பணம் ஆக்கியது. 

வளர்த்ததை தானே கொலைசெய்து தானே இறுதி அஞ்சலி செலுத்துவது போல அவனுக்கிருந்தது. 

“சமி நீ எந்த காரணமும் சொல்ல தேவையில்ல! என்னைக்கு நீ என்னோட மனசுக்குள வந்திட்டியோ அப்பவே நீ என்னோட முதல் இலட்சியம் ஆகிட்டே! மத்ததெல்லாம் இரண்டாவதாயிட்டு! அதுல கூட உன்ன ஒரு மகாராணி போல என்னோட சொந்த உழைப்பில வைக்கணும்னு தான் நினைச்சேன். ‘எனி ஹவ்’ உன்னோட விருப்பத்தை நிறைவேற்ற நான் கடமைப்படுறேன். அதனால வீட்டில சொல்லி நீ விரும்பியது போலவே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்” 

என ரொஷான் சொன்னதும் இடம் பொருள் ஏவல் என்ற சகலதையும் மறந்து அவனை கட்டியணைத்தால் சம்ஹா. அந்த செயல் சரியோ தவறோ அந்த முடிவு அவளை சந்தோசத்தின் உச்சத்திற்கே அவளை அழைத்துச் சென்றதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. இன்னொரு வகையில் அவ்வாறான ஒரு ஆறுதல் இவனுக்கும் தேவையாக இருந்தது. அவளுக்கான இழப்பு எனும்போது அவளே ஆறுதலாக வரும் காதலின் வேடிக்கை ஒருவகை வியப்பையும் தரத்தவறவில்லை.

திருமணத்திற்கு எந்த எதிர்ப்பும் இரு வீட்டிலும் இருக்கவில்லை. ரொஷானின் தந்தையான நஜீம் ஹாஜியாரின் பெருந்தன்மை சம்ஹா வீட்டாரின் நடுத்தர குடும்ப நிலையை புரிந்து செயற்பட்டது. 

“மச்சான் செலவு அது இதுன்னு நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க முழு செலவும் என்னோடது அல்ஹம்துலில்லாஹ்” 

என சம்ஹாவின் தந்தையிடம் ரொஷானின் தந்தை கூறியது மட்டுமின்றி முன்று பவுன் செயினை தன் மருமகளுக்கு அடையாளம் போட்டது தொடங்கி சம்பிரதாய பூர்வமாக திருமண ஏற்பாடுகள் சாவகாசமாக நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் சம்ஹாவின் சகோதரி கணவன் அந்த வீடு தன் பெயருக்கு எழுதி தரப்பட ஒரு சாதகத்தை இந்த திருமணம் செய்யும் என்ற நம்பிக்கையுடன் திருமண ஏற்பாடுகளில் தீவிர ஈடுபாடு காட்டினார். ஒருவகையில் சந்தர்ப்ப நடத்தையென்று தெரிந்தாலும் அப்படியாவது ஒரு மருமகனாக, கணவனாக, மச்சானாக இயங்கியது அந்த குடும்பத்தை கொஞ்சம் நெகிழவும் வைத்தது. ஆனால் விதியின் இன்னொரு மண்டலம் நோக்கி அவர்கள் செல்வதை யார்தான் உணரமுடியும்!? குறிக்கப்பட்ட திருமண நாளும் நெருங்கியது.

தொடரும்….

எம்.யூ.ஏ.ரஹீம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!