சில்லென்று ஒரு காதல் - 03
(தொடர்கதை EP 03)

ஆழமாக பழகும் போது அந்த அன்பு பலமாவும் பலகீனமாவும் மாறும்! அவரவருக்கென முடிவுகளை அது தீர்மானிக்கும். அதன் விளைவு தனிப்பட்ட சுதந்திரங்களிலும் இலட்சியங்களிலும் எல்லை மீறி கைவைத்து விடுகிறது. அதற்கான காரணங்களை சூழ்நிலையை ஆராயவோ நியாய தர்மங்களை சிந்திக்கவோ அவகாசம் எடுக்காத செயல்களை அது புரிந்தும் விடுகிறது. கடைசியில் உன்குற்றமா என்குற்றமா என்பதே அங்கு பேசுபொருள்! ஆராயப்பட வேண்டிய விடயம் கிடப்பில் இருக்க அர்த்தமற்ற சர்ச்சைகள் தொடரும்.
“நீங்க வெளிநாடு போய்தான் சம்பாதிக்கனுமா இங்கயே உங்க டிகிரிக்கேற்ற தொழிலை அமைச்சிக்கலாமே! அத்தோட நான் உங்கள மெரி பண்ணிட்டே படிப்ப கண்டினியூ பண்றேன். அப்படியும் இல்லன்னா மெரி பண்ணிட்டு நீங்க சார்ஜா போங்க!”
என்ற சம்ஹாவின் பேச்சு ரொஷானுக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் கொடுத்தது.
“சமி ப்ளீஸ் அண்டஸ்டான் மீ! எனக்கென வீடு வாசல் வாகனம்னு எல்லாமே இருந்தாலும் அதெல்லாம் என் டடியோடது. அது இல்லாம சுயமா ஒரு நிலைக்கு வரணுங்கிறது என்னோட பெரிய இலட்சியம். அட்வான்ஸ் லெவலுக்கு பின்னாடி இருந்தே பார்ட்டைம் ஜாப் அப்படி இப்படின்னு இப்பவரைக்கும் கஸ்டப்பட்டுகிட்டிருக்கேன்! அதெல்லாம் அதுக்காக தான்னு தெளிவா உன்கிட்ட சொல்லியும் இருக்கேன்! இப்போ என்னோட பாங் பலன்ஸ் கூட என் சொந்த சல்லிதான்! கார்ல வந்து சொகுசா படிச்சிட்டு போகாம ஹாஸ்டல்ல தங்கி படிச்சு டியூடரிகல்ல பார்ட்டைம் கிளாஸ் செஞ்சி….. இப்படி ஏகப்பட்ட கஸ்டங்கள தாண்டி வந்திட்டு மனேஜ்மென்ட் டிகிரியோட போனா ஓவர்த த்ரீ லாக்ஸ் சலரியோட எல்லாம் சரியா இருக்கும் போது ஜஸ்ட் நாலு வருஷம் காத்திருக்க ஏலாங்கிறது பிழையேம்மா! வேணும்னா நான் சொன்னது போலவே வீட்டில சொல்லி பேச்சுவார்த்தையை முடிச்சுட்டு போறேன். இதுக்கு ஓகே தானே!?”
என அவன் சொன்னபோது அவளது முகத்தில் ஏமாற்றத்தை அவனால் அவதானிக்க முடிந்தது.
“நீங்க ஒன்ன புரிஞ்சுகங்க உங்கல நான் புரிஞ்சிக்காம இல்ல. ஆனா எனக்கும் குடும்பம் மனசு பிரச்சினைகள்னு நிறைய இருக்கு. என் சூழ்நிலை தான் இப்படி பேச வைக்கிது. நெக்ஸ்ட் ஜனவரியோட வாப்பாவும் ரிடையர் ஆகிறார். எனக்கு சரியா இரண்டு வயசு இளைய தங்கச்சி இருக்கா! திருமணம் முடிச்சு போயும் கொடுத்த காணி மதிப்பில்லைன்னு மச்சானோட சொத்தாசையில வாழாவெட்டியா தொங்கோட்டாம் ஓடுற தாத்தா! இருக்கிற காணியையும் வீட்டையும் எழுதி குடுத்திட்டா எனக்கும் தங்கச்சிக்கும் எதுவும் இல்லைன்னு போயிடுமேன்னு கவலைப்படும் உம்மா வாப்பா….. நீங்க ஒன்ன புரிஞ்சுகங்க வாப்பாவோட ஆசைங்கிற ஒரே காரணம்தான் என்ன யூனிவர்சிட்டிக்கு வரவச்சுது. அதான் நான் படிக்கிறதுக்கு ஒரே மோட்டிவேசன். போனதடவை வீட்டுக்கு போய் வராம இருக்கத்தான் முடிவெடுத்தேன். ஆனா இந்த பாலாய்போன லவ் உங்க முகம் அங்கயும் இருக்க முடியல. அத்தோட புதுசா எங்க வீட்டில தங்கச்சி மூலமா சிக்கல் நடக்க வாய்ப்பிருக்கிறதா படுது!…. அவளோட பிஹைவியர்ல ஒரு மாத்தம் தெரியிது!”
என சம்ஹா கூறி நிறுத்தவும்….
“ஏதாவது லவ் கிவ்…. அப்படியும் இல்லைன்னா ஏதாவது வித்தியாசமான பாதிப்புக்கள் இருக்கலாம்! ஆனா அதுக்கும் நம்ம விவகாரத்துக்கும் என்ன தொடர்பு?”
என ரொஷான் கேட்கவும் சம்ஹா தலையாட்டியபடி…..
“இல்ல அவள் வாப்பாக்கு எதிரா ரிவெனஜ் மைன்ட் எடுத்திருக்கிறாள்! எனக்கு அந்த ஒரு வாரத்தில முழுசா தெரிஞ்சிக்க முடியல! தங்கச்சியோட முரண்டுக்கு பின்னால வாப்பாட சுயகௌரவம் மோதுறதா தெரியிது! ஆனா வாப்பா என்கூட பேசினாரு ‘அவள் பாதி கொன்னுட்டா! நீயும் அப்படி ஏதாவது செஞ்சிடாதம்மா!’ என்று மாத்திரம்தான் சொன்னாரு! அதனால நம்ம காதல் விவகாரம் தெரிஞ்சிட்டா ஏதாவது சிக்கலாகிடும்னு பயமா இருக்கு!”
என கூறி மெளனம் காத்த சம்ஹாவை கூர்ந்து அவதானித்தான் ரொஷான். அவளது கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென ஓடியது.
தொடரும்…..
எம்.யூ.ஏ.ரஹீம்