ஒரு வானவில் போலே - 33
தொடர்கதை பாகம் 33
வயது உருவங்களை மாற்றினாலும் ஏதோ ஒரு சில அடையாளங்களை தெரிந்து கொள்ள வைத்திருக்கும். அந்த வகையில் ஒரு Car லிருந்து தர்சன் இறங்குவதை அவதானித்தேன். அவனோடு ஒரு வயதான பெண்ணும் இறங்கினார்! அது யாரென ஊகிக்க முடியவில்லை. அடுத்த Car லிருந்து வயதான ஒரு ஆணும் பெண்ணும் இறங்கினர்! அது யாரென கூர்ந்து பார்த்தேன். அது குணசேகரன் அண்ணாவும் தமயந்தி அக்காவும் தான்! இதற்கிடையில்….
“வாங்கப்பா….”
என்றவாறு கயல்விழி எனது கையை பிடித்து ஒரு குழந்தையை அழைத்துச் செல்வதுபோல் அவர்களுக்கருகில் கூட்டிச் சென்றாள்! இந்த உரிமை இந்த ஆதரவு அவளிடம் வந்ததை நினைத்து ஆச்சரியப்பட்டேன். தர்சன் அந்த பதின்ம வயது காலத்தில் பார்த்த அதே சிரிப்புடன் என்னை வந்து இறுக அணைத்தான்.
“எப்படி இருக்கே கதிர்…”
என அவன் சொல்லும் போதே மெல்லிய விம்மலுடன் பேச்சு தழு தழுத்தது. எனது மௌனத்தை உடைத்து மெல்லிய அழுகை எனக்கும் கட்டுப்படுத்த முடியாமல் வந்திச்சு.
“தர்சன் ஏன்டா இப்படி….. என்ன குற்றமடா நான் செஞ்சன்!? நீ கூட என்ன புறக்கணிச்சிட்டாயடா”
என்ற எனது தோளில் தட்டிய குணசேகரன் அண்ணா….
“அதுதானே கதிர் இப்ப எல்லாத்தையும் தெளிவா உனக்கு சொல்லத்தான் வந்திருக்கிறம்” என்றார்.
இது யாராயிருக்கும் என்று யோசித்தவாறு தர்சனோடு வந்த அந்த வயதான பெண்ணை பார்த்தேன். அதை புரிந்து கொண்டவளாக கயல்விழி….
“அப்பா நான் ஒரு தடவ Grandma ஒருத்தர் இருக்கார்னு சொன்னேன்ல… அதாவது சிங்களம் மட்டுமே பேசுவாங்கன்னு அவங்க தான் இது….. தர்சன் Uncle ட அம்மாவோட தங்கச்சி… துரதிஷ்டவசமா என்னோட அம்மாவுக்கு நடந்த சம்பவங்களில இவங்க அருகில இருந்தாங்க. இவங்கதான் அம்மாவ இரண்டு வருஷத்துக்கு மேலா பார்த்திருக்காங்க.”
என்றதும் ஞாபகம் வந்திச்சு…. அதாவது அஜந்தாவோட அம்மான்னு சந்தேகப்பட்டது இவங்க தான்னு புரிஞ்சிச்சு.
“அப்படின்னா தர்சன் உன்னோட Dad, mumm லாம்!?” என்றேன் நான்.
“they passed away கதிர்… அந்த சம்பவத்துக்கப்புறம் நாலு வருடத்துக்கு பிறகு தான் அஜந்த உன்னை தேடி வந்தா! அதாவது ஏறத்தாழ செத்துப் பிழைச்சு வந்தா….ஆனா அப்பவும் அவ முழுசா சரியாகல” என்ற தர்சனை பார்த்து…
“புரியலடா! புதுசா ஏதோ குழப்பிற மாதிரி தெரியுது!” என்றேன் நான்.
“ஹ்ம்ம் bloody war destroyed our family…” என்றுவிட்டு மௌனமாயிருந்தான் தர்சன். அவனது கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் எட்டிப்பார்த்திச்சு. கயல்விழி ஆறுதலாக தர்சனது தோள்களை தட்டினாள். அப்போது குணசேகரன் அண்ணா…..
” அதுவந்து கதிர் தனபாலன் மச்சான் transfer கிடைச்சு Trinco போனவர். கொஞ்ச காலம் அவர் தனியா இருந்திட்டு பிறகு குடும்பத்தையும் அங்க கூட்டிட்டு போன அன்றுதான் துரதிஷ்டமான சம்பவம் நடந்தது. போன train க்கு கண்ணிவெடி வெச்சிட்டினம். அதுல குடும்பமே அடிபட்டுது. On the spot தனபாலன் மச்சானும் அக்காவும் போயிட்டினம். அஜந்தா நல்லா காயப்பட்டு பேச்சு மூச்சில்லாமல் ஆறுமாசம் இருந்தவள்…. அதுக்கு பிறகும் இரண்டு வருசமா சரியான நிலைக்கு வரயில்ல. ஆனால் திடீரெண்டு உசாராகி normal க்கு வந்திட்டாள். அவள்ட சின்னம்மாதான் அவள கிட்ட நின்று கவனிச்சு பார்த்தவ. தர்சன் அப்ப German ல இருந்தவன். தனபாலன் மச்சான் ஏற்கனவே அஜந்தாவும் German போறதுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தவர் ஆனால் அவள் தான் உன்னை நினைச்சு போக விரும்பயில்லை. அவள்ள ஏதோ medical abnormal இருந்ததால அத காரணம் காட்டி தர்சன் அங்கு எடுத்திட்டான். பிறகு குடும்பத்தோட நிலையை சொல்லி அங்கே இருக்கிற மாதிரியும் செஞ்சிட்டான். அவள் treatment சரியா முடிய முதல் உன்ன பார்க்க வேணுமெண்டு இலங்கைக்கும் வந்திட்டாள்…”
என சொல்லவும் தான் யாழ்ப்பாணத்தில் அஜந்தாவின் இறுதி கடிதம் அவளது Daddy யின் Trinco transfer பற்றி சொன்னது எனக்கு ஞாபகம் வந்திச்சு. அத்தோட பேராதனையில் வைத்து சந்தித்த போது எரிகாயம் போல் அவளது கையிலிருந்த அடையாளத்தின் காரணமும் புரிந்தது. ஆனால் இவை எல்லாவற்றையும் மறைத்து, பல பொய்களை எனக்கு சொல்லியிருக்கிறாள்! அப்போது…
“இதெல்லாம் தன்னோட treatment முடிவில வரப்போகிற 10 person chance னு தெரிஞ்சதுக்கப்புறம் தர்சன் Uncle கிட்ட பேசி Plan பண்ணி செஞ்சா”
என்றாள் கயல்விழி.
தொடரும்…..
எம்.யூ.அப்துல் ரஹீம்