News February 13, 2026 Rawfan

கடவுச்சீட்டுப் பெற இன்று அலுவலகங்களுக்கு வர வேண்டாம்! கணினி அமைப்பில் கோளாறு காரணமாக அவசர அறிவிப்பு!

கடவுச்சீட்டுப் பெற இன்று அலுவலகங்களுக்கு வர வேண்டாம்! கணினி அமைப்பில் கோளாறு காரணமாக அவசர அறிவிப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய கிளை அலுவலகங்களுக்குச் சேவை பெறுவதற்காகப் பொதுமக்கள் இன்றைய தினம் (13 பெப்ரவரி 2026) வருகைத் தருவதைத் தவிர்க்குமாறு அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான கணினி அமைப்பில் (Computer System) ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறு இன்னும் முழுமையாகச் சீர்செய்யப்படவில்லை. இதன் காரணமாகவே, பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் பொருட்டுப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மீண்டும் சேவை ஆரம்பிக்கும் திகதி:
தற்போது நிலவும் தொழிநுட்பக் கோளாறுகளைச் சரிசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, கடவுச்சீட்டு வழங்கும் சாதாரண சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16 பெப்ரவரி 2026) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வந்தவர்களுக்கான முன்னுரிமை:
கணினி கோளாறு காரணமாக நேற்று (12) வருகை தந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதிருந்த விண்ணப்பதாரர்களுக்கு, எதிர்வரும் திங்கட்கிழமை முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளது.

எனவே, அவசரத் தேவைகளுக்காகக் கடவுச்சீட்டுப் பெறத் திட்டமிட்டிருப்போர் இன்றைய தினம் அலுவலகங்களுக்கு வருகைத் தருவதைத் தவிர்த்து, திங்கட்கிழமை முதல் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.