நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை தொடரும்! 50 மி.மீ மழைவீழ்ச்சி மற்றும் மின்னல் குறித்து பொதுமக்கள் அவதானம்!
இன்றைய தினம் (07 பெப்ரவரி 2026) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். அத்துடன் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை:
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாக சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று மற்றும் பனிமூட்டம்:
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மாத்தளை, திருகோணமலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்:
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.