ஒரு வானவில் போலே - 20
தொடர்கதை பாகம் 20
ஒவ்வொரு இரவும்
இனிதான விடிவை
தருமென்ற நம்பிக்கை
இப்போது இங்கில்லை!
அகால மரணங்கள்
மலிவான பூமியில்
இரத்தச் சிவப்பில்
மண் மருதானி
போட்டிருக்கிறது! இங்கு
சூரியனின் கண்ணீரில்
நிலவும் கொதிக்கிறது! – இந்த
காலத்தின் கொடுமை
நிச்சயம் மோசமானது….
யுத்தம் தன் கடமையை
கொடூரமாக செய்யும் போதும்
காதலின் தீபமான
உனது நினைவுகளில்
இங்கு என் மகிழ்ச்சி
நெகிழ்ச்சி காண்கிறது!
எனக்காக காத்திரு
என்பதைவிட இங்கு
இறுதிக் கணங்களிலும்
இவன் இதயம் உனக்காக
துடிக்கும் என்பதை சொல்ல
என் புறாவை தேடினேன்….
சிதறிப்போன அதன்
பாகங்களுக்கு பக்கத்தில்
அமர்ந்து அழுகின்ற
ஓர் தெரு நாய்
என்னை ஏக்கத்தோடு
பார்க்க இங்கு மனிதம்
வெட்கித்து போகிறது…..
என்ற கவிதை வரிகளை தான் இறுதியாக அவளுக்காக அனுப்பினேன். நாங்களும் அடிக்கடி இடம்பெயரும் சூழ்நிலைகள் வந்திச்சு. இதற்கு நடுவில் தான் அப்பாவும் மரணித்தார். அதற்கு பிறகு Civil நிர்வாகம் முற்றாக செயலிழக்க முன் இறுதியாக அவளிடமிருந்து வந்த கடிதத்தில்… Daddy க்கு திருகோணமலைக்கு transfer கிடைத்திருப்பதாக இருந்திச்சு. தர்சன் Germany போக இருப்பதாகவும், அவளையும் அவளையும் சில வருடங்களில் அங்கு அனுப்ப முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தாள். ஆனால் என்னை விட்டுவிட்டு எங்கும் அசைவதாக இல்லையென எழுதியிருந்தாள். எமக்குள் சில Photo க்களையும் பறிமாரி இருந்தோம். அந்த சூழ்நிலைக்குள் நான் படித்து University க்கும் தெரிவானேன். அதுவும் மொரட்டுவ University கிடைத்தது. அதனால் கொழும்பு வரும் வாய்ப்பு இருந்தும் அம்மாவையும் தங்கையையும் விட்டுவர மனம் இடங் கொடுக்கவில்லை.
ஆனால் அம்மா நான் படிக்க வேண்டுமென பிடிவாதமாக இருக்கவே வவுனியாவில் ஒரு உறவினரின் உதவியோடு வீடெடுத்து வைக்கும் உடன்பாட்டில் University போக சம்மதித்தேன். அன்று வவுனியா தாண்டி யாழ்ப்பாணம் செல்வது மிகவும் கஷ்டமானது. அடிக்கடி அம்மாவையும் தங்கையையும் பார்க்க விரும்பினேன். அத்துடன் ஏதாவது ஒரு வாய்ப்பில் அஜந்தாவை பற்றிய தகவல் கிடைக்குமென ஒரு நம்பிக்கை இருந்திச்சு. ஆனால் அடுத்த நான்கு வருடங்களும் நிராசையாகவே போனது….. ஆனாலும் சூழ்நிலைகளை எமது காதல் வெற்றி கொள்ளுமென ஒரு நம்பிக்கை Indian Cinema தனமாக எனக்குள் இருந்திச்சு…. அப்போதுதான் என்னோட முதலாவது training appointment job கடுகன்னாவ பகுதியில் ஒரு நிறுவனத்தில் கிடைத்தது.
Good times are a matter of luck என்று சொல்லுவாங்க! எனக்கும் அப்படித்தான். விதி என்பது எனது வாழ்க்கையில் மிக புதுமையா விளையாட ஆரம்பிச்ச காலமது. அப்போது ரம்மியமான அந்த ஊரில் மனதால் அஜந்தாவை சுவாசித்தவனாக காத்திருந்த ஒரு நாள் நண்பர்கள் சிலர் கட்டாயப்படுத்தி பேராதெனிய university யில் நடந்த Exhibition க்கு அழைத்துச் சென்றனர். அங்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அஜந்தாவை சந்தித்தேன். ஏறத்தாழ இப்போ மதுபாசினியை கண்ட அதே வயது அதே உருவம் ஆனால்….. ஆனால்…. அவள் என்னை கண்டும் காணாதது போல் இருந்தாள்! நான் சிரித்தும் கூட எந்த reaction ம் இல்லாமல் இருந்தாள்! என்னோட face cut ல ஏதாவது பெரிய மாற்றம் இருக்குமா? என்றுகூட சிந்தித்தேன்….நூறு வீதம் அவளே தான்! நெற்றியில் நான் வைத்த அடையாளம் கூட இருந்திச்சு…. ஏதோ ஓர் ஆர்வத்தில் அருகில் ஓடிச்சென்று….
“Hai Ajantha! எப்படி இருக்கே?”
என்றேன். என்னை வினோதமாக பார்த்துவிட்டு….
“Sorry Aiye oyata weraduna” என்றாள். அதாவது ‘மன்னிக்கவும் அண்ணே! நீங்க தப்பா புரிஞ்சிட்டீங்க!’ என சிங்களத்தில் சொல்லவும்…. அதிர்ச்சியடைந்தேன். மனதில் அவளையே நினைத்து கொண்டிருப்பதால் இப்படி ஒரு உருவ ஒற்றுமையை பார்த்து confuse ஆகியிருக்கும் என நினைத்தவாறு…
“Samavenna nangi” மன்னிக்கவும் தங்கச்சி
என சிங்களத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டு தலையை கவிழ்த்தவாறு மறுபக்கம் திரும்பி இரண்டு அடி வைத்திருப்பேன்….
“ஏன் கல்லெடுத்து அடிக்கலையா?”
என அஜந்தாவின் குரலாக தமிழில் அவள் பேசினாள்! திரும்பி பார்த்தபோது அதே trade mark மந்திரப் புன்னகை உதட்டில் தெரிய என்னை பார்த்து புருவங்களை உயர்த்திவிட்டு கண்சிமிட்டினாள்!!!!
தொடரும்…..
எம்.யூ.அப்துல் ரஹீம்