ஒரு வானவில் போலே - 14
தொடர் கதை பாகம் 14
காலம் இடம் பொருள் ஏவல் சூழ்நிலை என்பவற்றை மறப்பதுதான் காதலின் யதார்த்தம் என்பதால் நானும் அதற்கு விதிவிலக்கல்ல. தங்கை திக் பிரமை பிடித்தவளாக நின்றாள். ஆனால் அஜந்தா நான் காதலை வெளிப்படுத்தியதும் ஒரு அதிர்ச்சியை காட்டினாள்; தவிர எனது கண்களை மிக ஆழமாக ஊடுருவி பார்த்தாள்! அந்த பார்வையின் வீச்சை தாங்க முடியவில்லை! ஆனால் அது எனது Expression க்கான Positive reaction ஆக அது இல்லை என்பது மட்டும் புரிஞ்சிச்சு…..
“I am sorry…. மனசில இருப்பதை தான் சொன்னேன்” என்றுவிட்டு பதிலை எதிர் பார்க்காமல் எனது room க்கு சென்று கதவை மூடிவிட்டு கட்டிலில் போய் விழுந்தேன். அவளுக்கு என்னை பிடித்திருக்காதா? இதை அவளது வீட்டில் சொல்லிவிடுவாளா? இதனால் புதிய பிரச்சினைகள் வந்திடுமா? என ஏகப்பட்ட யோசனைகள். அதனால் பதற்றம் குழப்பம் பயம் இந்த மூன்றும் என்னை பிடித்திருக்க ஒரு வகை சோர்வு என்னை பிடித்த நிலையில் எவ்வளவு நேரமோ தெரியாது உறங்கிவிட்டேன். கதவு தட்டப்படும் சத்தத்திற்கு தான் கண் விழித்தேன்.
கதவை “எவ்வளவு நேரமா கதவ தட்டுறன்! அப்படியென்ன உனக்கு பேயடிச்ச நித்திரை!?” என அம்மா கேட்ட போதுதான் time பார்த்தேன். இரவு ஒன்பது மணி தாண்டி இருந்திச்சு. ஏறத்தாழ நாலு மணியில் இருந்து உறங்கியிருப்பேன்.
“கை கால் அலம்பிட்டு சாப்பிட வா” என மறு அழைப்பு வரவும் கிணற்றடிக்கு செல்ல தங்கையின் room னை தாண்டும் போது தான் அங்கு கதவுக்கு அருகில் சுவற்றில் சாய்ந்தவாறு தங்கை என்னையே அவதானிப்பது தெரிஞ்சிச்சு. நிமிர்ந்து அவளை பார்க்க ஏதோ ஒன்று தடுத்தது. கைகால் அலம்பி வந்து Dining table ல் அமர்ந்ததும் அம்மா உணவை பரிமாறியபடி…..
“பொடியன் மாரும் வந்து தேடிட்டு போனவ! அவன்….. என்ன பெயர்… ஆ அஜந்தாவோட அண்ணனும் இரண்டு தடவ வந்து பார்த்திட்டு போனவன்” என்று சொன்னதும் கொஞ்சம் திடுக்கிட்டேன். அப்போது அவ்விடத்துக்கு தங்கையும் வந்திருந்தாள்.
அப்படியென்றால் தர்சன் வந்திருக்கிறான். அவனிடம் அஜந்தா ஏதாவது சொல்லியிருப்பாளா? அல்லது நட்பு ரீதியில் வந்திருப்பானா? என குழப்பமாக இருந்திச்சு!
“தர்சன் வந்து என்ன எதாவது சொன்னவனா?
என அம்மாவிடம் கேட்டேன். அதற்கு
“இல்ல இன்டைக்கு தான் கொழும்பில இருந்து வந்தவனாம் சும்மா உன்னோட கதைச்சிட்டு போக வந்திருப்பான்”
என அம்மா சொல்லவும் தங்கை எதேச்சையானது போல கொஞ்சம் இருமியவாறு தண்ணீரை எடுத்து குடித்தாள். அது அவளை நான் பார்க்க வேண்டும் என்பதற்காக நடத்தியது…. நான் அவளை பார்த்த போது கண்களையும் தலையையும் அசைத்து இல்லை என்பது போல் சைகை செய்தாள். அந்த இல்லை என்பது அம்மா தர்சன் நட்பு ரீதியாக வந்ததை இல்லை என்கிறாளா!? அல்லது தர்சனிடம் அஜந்தா ஏதாவது சொல்லி இருக்கலாம் என நான் நினைப்பதை இல்லை என்கிறாளா!? என எதுவும் புரியவில்லை.
சிறிது நேரத்தில் அம்மா அவ்விடத்தை விட்டு சென்றதன் பின் அருகில் வந்த தங்கை…..
“அண்ணே! உன்ட மனசில இப்படி ஒன்டு இருக்குமென்டு அவள் சத்தியமா நினைக்கலயாம் என்றாள்…. ஆனா அதுக்காக உன்ட Image பாதிக்கிற மாதிரி நிச்சயமா எதையும் செய்ய மாட்டாள்… அதனால தேவையில்லாம நீ பயப்பட தேவையில்ல…. இதுக்கு பிறகாவது காஞ்ச மாடு கம்பில சாய்ற மாதிரி வேலைகள செய்யாத! உன்னோட கிறுக்கு தனத்தால உனக்கு அவள்ட்ட இருக்கிற நல்ல பெயர கெடுக்காத! இரண்டு நாளைக்கு முன்னாடி தான் அவயல்ட ஊர்ல கொஞ்சப்பேர் இப்படி சுத்துறத பத்தி கடுமையா விமர்சிச்சவள்! உன் கிட்ட ஒரு நல்ல அபிமானமும் எதிர்பார்ப்பும் இருக்கு.” என்றுவிட்டு சென்றாள் பயம் கொஞ்சம் குறைஞ்சிச்சு. ஆனால் அப்போதும் என்னோடது one side Love இல்லைன்னு ஆழ்மனசு உறுதியா சொல்லிச்சு. ‘வயது சில நேரம் உணர்ச்சி வசப்பட்டாலும் சில நேசங்கள் காலத்தால் அழிக்கவோ மறுக்கவோ முடியாதது என்பதை அஜந்தா நிச்சயம் புரிந்து கொள்வாள்’ என நம்பினேன்.
தொடரும்…..
எம்.யூ.அப்துல் ரஹீம்