ஒரு வானவில் போலே - 11
தொடர் கதை பாகம் 11
அன்று மாலை எங்கள் வீட்டிலும் சின்ன குழப்பம்! அதற்கு காரணம் தங்கை அஜந்தாவுடன் பழகுவதை அப்பா விரும்பவில்லை. அதற்கு ஒரே காரணம் அஜந்தா ஒரு சிங்கள தாய்க்கு பிறந்தவள் என்பதாகும். அதை வெளிப்படையாக கூறாமல் அம்மாவிடம் ரகசியமாக கூறி அதட்டினார். நான் நான் ஏதோ தேவைக்காக kitchen பக்கம் போன போது இது நடந்திச்சு. எனக்குள்ளே ஏற்பட்ட அதிர்ச்சியை காட்டிக் கொள்ளாமல் அங்கு நடப்பதை காதை கூர்மையாக்கி ஒட்டுக் கேட்டேன்…..
“சரி சரி இதுதான் நல்ல சந்தர்ப்பம் தமயந்தி வீட்டுக்கு இவளை போக வேண்டாமென்டு சொல்லு… அந்த பிள்ள வந்தாலும் பேய் பிசாசு தீட்டு காத்து கறுப்பு என எதாவது சொல்லிவிடு…” என அப்பா சொன்னார்….. அதற்கு
“அந்தப் பிள்ள எவ்வளவு நல்ல பிள்ளையப்பா! நீங்க யார்டயோ பேச்ச கேட்டு தவறா முடிவெடுக்கிறியல்!” என அம்மா சொல்லவும்….
“சும்மா விழல் கதை கதைக்காத…. சாதி சம்பிரதாயம் குலம் கோத்திரம் இனம் இதெல்லாம் பார்க்காட்டி தின்ற பீங்கான்ல கழிச்சு போட்டும் போக ஏலும்! வாழையடி வாழையா நடக்கிற இதையெல்லாம் விட்டுப் போட சொல்றியோ!? இவள் இப்ப friend என்டுவாள்…. நாளைக்கு அவன் வந்து கட்டினா அவளத்தான் கட்டுவன் என்டுவான்! நான் கொடுக்க கலட்டி தலைப்பா கட்டிட்டு இலிச்சிட்ட நிற்க வேணும்” என கொஞ்சம் கடுமையான தொனியில் கூறி அம்மா விரும்பாத ஒன்றை பலாத்காரமாக செய்ய தூண்டினார்!
ம்ம்ம் அஜந்தாவின் Daddy கூறிய…. சாதி சம்பிரதாய சடங்கின் முகவர்களில் ஒருவராக எனது அப்பாவும் இருப்பது அவமானமாகவும் கவலையாகவும் இருந்திச்சு. இந்த சம்பவத்தை தங்கையிடம் சொல்ல வேண்டுமென அவளது அறை பக்கம் சென்றேன்…. அப்போது அழைப்பு மணி அடிக்கும் சத்தம்! யாராயிருக்கும்!? என்ற சந்தேகத்துடன் சென்று கதவை திறந்தேன். அங்கு அஜந்தாவின் அம்மா நின்றிருந்தார்! அவர்….
“மகன் ஒரு சின்ன உதவி கேட்டு வந்தேன்?” என கேட்கும் போதே அம்மாவும் அப்பாவும் அங்கு வந்துவிட்டனர்.
“யாரது?” என அம்மா கேட்கவும் பதில் எதுவும் சொல்லாமல் நான் கதவை முழுதாக திறந்தேன். அம்மா அப்பாவின் முகத்தை பார்த்தவாறே….
“வாங்கோ உள்ளுக்கு வாங்கோ” என வரவேற்றார். உள்ளே வந்தவர்
“இல்ல அங்க வீட்டில சூழ்நிலை கொஞ்சம் சரியில்லை…. அதனால இன்னைக்கு ஒரு night அஜந்தாவ செல்வியோட தங்க வைக்கலாமான்னு கேட்க வந்தேன்” என்றார். அதே நேரம் செல்வியும் அந்த இடத்திற்கு வந்துவிட்டாள்.
அம்மா அப்பாவின் முகத்தை பார்க்க நான் அம்மா அப்பா இருவரின் முகத்தைப் பார்க்க அந்த சில நொடிக்குள் செல்வி….
“Why not aunty with pleasure” என்றாள். அதே நேரம் அம்மாவும் …..
“ஓ அதில என்ன இருக்கு!? தாராளமா வரச் சொல்லுங்கோ” என்றார். அப்பாவின் பாடு தர்மசங்கடமாகிவிட்டது. அஜந்தாவின் அம்மா நன்றி கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அப்பாவும் எதுவும் கூறாமல் வெளியே சென்றுவிட அம்மா சென்று செல்வியின் தலையை தடாவியவாறு….
“இந்த மனுசன் எப்ப சொந்த புத்தியோட நடந்திருக்கு…. எவனாவது சொன்னத வச்சு பப்பாமரத்தில ஏறியிருப்பார். ஆனாலும் உன்னோட துணிவை பாராட்டத்தான் வேணும்” என்றார். அப்போதுதான் செல்வியின் முகத்தை அவதானித்தேன்…. அழுது சிவந்த கண்கள்! சொல்விக்கும் அப்பாவின் கூத்து தெரிந்திருக்கும் என ஊகித்தேன். மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்திச்சு! உண்மையில் வேறு யாருடனும் அஜந்தா செல்வியோடு பழகிய அளவு பழகவில்லை. அதுதான் அவளது அம்மா கேட்டு வந்ததற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அஜந்தா வரவில்லை. அப்பாவும் வந்திருக்கவில்லை. அது எனது mission க்கு சாதகமாக அமைய இரவு ஒன்பது மணியளவில் எங்கள் வீட்டு கொல்லைப்புற மதிலால் பாய்ந்து சென்று அஜந்தாவின் Daddy சொன்ன இரண்டு targets களையும் செய்ய தயாரானேன்.
தொடரும்…..
எம்.யூ.அப்துல் ரஹீம்