உணர்வுகளின் விடுகதை 02

(தொடர் கதை EP 02)

ரமீஸ் சற்று குழம்பியுள்ளதை உணர்ந்தான். ஏதோ தப்பொன்றை செய்வது போன்ற உணர்வு அவனை வாட்டியெடுத்தது. இதிலிருந்து சேதப்படாமல் வெளியே வரவேண்டும் என நினைத்த மாத்திரத்தில் அவளின் முகம் கண்ணெதிரே வந்து புன்சிரித்து போனது. 

இன்னும் கல்யாண வீட்டில் எதேச்சையாக இரண்டொரு தடவை அவள் கண்ணில்பட நிலமை மோசமானது. சிறிய தாயின் வீடு என்பதால் எல்லா இடத்திற்கும் செல்லும் சுதந்திரம் அவனுக்கிருந்தது. அந்த சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி இட்டால் நிலமை ஓரளவு சரியாகுமென நினைத்தான். ஆனால் அதற்கு ஆப்பாக தங்கை சகிதம் சில தேவைகளுக்காக அவள் வந்து போக எக்காரணம் கொண்டும் அவளது முகத்தை பார்ப்பதில்லையென்ற முடிவு செய்தான். 

“நாநா இத கொண்டு பெய்த்து முன்னுக்கு குடுங்க!” 

என தங்கை பலகார தட்டை நீட்டிய போது நிமிர்ந்து பார்த்தான் அவளும் கூடவே இருப்பது தெரிந்தது. கண்டும் காணாதது போல் தட்டை வாங்கி திரும்பியபோது….. 

“ஏன் எங்க கூட ஏதாச்சும் கோபமா?”

என்ற கேள்வி அவளிடமிருந்து வருமென அவன் எதிர்பார்க்கவில்லை. சமாளிப்பு பாணியில் முகத்தை வைத்துக் கொண்டு… 

“அப்படில்லாம் இல்ல” 

என்றவாறு நகர்ந்தான். 

“நாநா இன்னொரு தட்டிருக்கு வாங்க”

 என தங்கை சொன்னபோது தான் அவளது கையிலும் ஒரு பலகார தட்டிருந்தது இவனுக்கு தெரிந்தது.

 “ம்” கொட்டியவாறு முன்னுக்கு வந்து மேசையில் தட்டை வைத்து விட்டு அங்கு நின்ற தம்பி ரசீத் இடம்…. 

“இன்னொரு தட்டு உள்ளுக்கிருக்கு எடுத்திட்டுவா!” 

என்றுவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறி அங்கிருந்த தக்கியா பள்ளி நோக்கி நடந்தான். குழம்பிய மனநிலையும் குற்ற உணர்வும் அவனை பிடுங்கியது. வுழூ செய்துவிட்டு இரண்டு ரக்காத்து தொழுத போது மன அழுத்தம் கொஞ்சம் குறைந்தது. 

“யா அல்லாஹ் எனக்கென்று இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் காப்பாற்றிவிடு” 

என பிரார்த்தித்தவாறு பள்ளியின் ஒரு ஓரத்திற்கு சென்று சற்று ஓய்வெடுக்க நினைத்தபோது அவனையறியாமல் தூக்கம் அணைத்துக் கொண்டது. எவ்வளவு நேரம் தூங்கினானோ தெரியாது…. 

“நாநா நாநா” 

என தம்பி தட்டி எழுப்பிய போதுதான் எழுந்தான். 

“உங்கள எங்கயெல்லாம் தேடின! உம்மா கூப்பிடுய” 

என்ற போதுதான் time பார்த்தான் 11.15 காட்டியது.

“சுப்ஹானல்லாஹ் ரெண்டவர் தூங்கிட்டனா!?” 

என முணுமுணுத்தபடி எழுந்து சென்று முகத்தை கழுவிவிட்டு தம்பியோடு சின்னம்மா வீட்டை நோக்கி நடந்தான். வீட்டை நெருங்கிய போது மீண்டும் அவளின் நினைவு தொற்றிக் கொள்ள ஏதோ போல் இருந்தது. 

“தம்பி உம்மா எங்க ஈக்கிற?”

 எனக்கேட்டபோது 

“பின்னுத்து ரூம்ல” 

என பதில் வந்தது. ‘அவளும் அங்கிருப்பாலோ?’ என ஒரு எச்சரிக்கை அலாரம் அடிக்க ‘இருந்தா நமக்கென்ன’ என இன்னொரு பக்கம் அதே மனது பதில் கூறியது. அந்த ரூமில் நிறைய வயதான பெண்களே இருந்தனர். 

சிற்றன்னை ஒரு லிஸ்ட்டை இவனிடம் கொடுத்து…. 

“இதைல்லாம் ஹோலுக்கு கொண்டு பெய்த்து குடுத்திடு பாவம் சாச்சா சுப்ஹோட போனவரு சாப்ட்டாரோ தெரியாது!” 

என்றவரிடம்… 

“நான் பாத்துக்கிறேன் சாச்சி” 

என்றவாறு லிஸ்டை எடுத்து கொண்டு வெளியே வந்தவனுக்கு அதிர்ச்சி. தங்கையும் ரைஹானாவும் முன்னால் வருவது தெரிந்தது. கண்டும் காணாதது போல் அந்த லிஸ்ட்டை பார்த்தவாறு அவர்களை தாண்டும் போது….. 

“பார்த்து முன்னுக்கு எங்கயாச்சும் முட்டிட போறீங்க!” 

என தங்கை கூற அவள் க்ளுக்கென சிரிக்க அவனையறியாமல் அவர்களை நிமிர்ந்து பார்த்து இவனையும் சிரிக்க வைத்தது. அவளின் அந்த சிரிப்பு மறுபடியும் ஆழமாக இவனுக்குள் எதையோ செய்தது. 

“சொன்னது நான் ரியாக்ஷன் அங்கயோ!?” 

என தங்கை கூறிய போதுதான் ஏறத்தாழ இருவரும் சுய நினைவுக்கு வந்தனர்.

” Oh sorry” 

என்றவாறு இடத்தை விட்டு மாறும்போதுதான் கவனித்தான் அந்த பார்வை மோதலுக்கு பின் அவள் இவனது முகத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து நிலத்தை பார்த்தபடி இருந்தாள். இந்த மாற்றம் நல்லதற்கல்ல என உள்ளத்தின் ஒரு பகுதி எச்சரிக்கை விடுத்தது. மறுபக்கம் once again அவளை பார்த்துவிடு என்றது. தான் தோற்றுக் கொண்டு வருவது ரமீஸிற்கு புரிந்தது.

(தொடரும்…..)

M.U.A.Raheem.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!