சில்லென்று ஒரு காதல்….!  06

சில்லென்று ஒரு காதல் - 06

(தொடர்கதை EP 06)

அந்த வாடகை ரூமில் சம்ஹாவின் நினைவுகளோடு இருந்த ரொஷான் நண்பன் ராசிக்கை தட்டியெழுப்பி….

“மச்சான் டைமாயிட்டு ரெடியாகு!” 

என தட்டியெழுப்பவும் விழித்து கண்ணைக்கசக்கிய ராசிக் நேரத்தைப் பார்த்து திடுக்கிட்டு முறைத்தபடி….

“இவன் ஒருத்தன்! மூடிகிட்டு படுடா! மூனு மணிக்கே ரெடியாகி போய் அவங்க வீட்ல கோழியா திருடப் போறே! சத்தியமா முடியலடா!” என்றவாறு மறுபக்கம் திரும்பி படுத்தான்.

“மச்சான் மச்சான் சிங்கில் டவுட்டுடா! சமி வீட்ல அவ கூட ப்ரீயா பேச முடியுமா இருக்குமா?” 

என்ற ரொஷானின்  அந்த கேள்விக்கு கோபாவேசம் பொங்க எழுந்த ராசிக் டென்ஷன் பொங்க தலையை இரண்டு கைகளாலும் சொறிந்தவாறு…. 

“ஆமாடா ப்ரீயா பேச விடுவாங்க! பால் பழம் பலகாரம்  முட்டை கோப்பியெல்லாம் டைமுக்கு அனுப்புவாங்க! ஆனா இப்ப இல்ல ஒரு வாரத்துக்கு அப்புறம் கல்யாணம் நடந்த பின்னாடி! ப்ளீஸ்டா இரண்டு மணி நேரமாவது தூங்க விடுடா! தூங்கி எந்திரிச்சு நானே சூப்பர் ஐடியா தாறேன் இப்போ ஆள விடு!”

என்றவாறு மறுபடியும் படுக்கையில் தன் இரு காதுகளையும் பொத்தியவாறு விழுந்தான் நண்பன் ராசிக். அதற்குப் பின் ரொஷான் எதுவும் பேசவில்லை.

மறுபக்கம் கல்யாண கலை கட்டி வந்த சம்ஹா வீடு தலைகீழாக மாறியிருந்தது. “பெருசா சொத்து சுகத்த தரல! மானம் கௌரவம்னு சேர்த்து வச்சிருந்தனே! அதுதான் நீ எனக்கு தந்த பெரிய சொத்துன்னு நினைச்சு வாழ்றேன் அதுலயும் இடிய போட்டுடாத யா அல்லாஹ்!” 

என்று தந்தை புலம்புவதை சம்ஹாவினால் கேட்க சகிக்கவில்லை; உறக்கம் தொலைத்த அவளது கண்கள் மறுபடியும் கண்ணீர் விட தொடங்கியது. 

” மச்சான் இப்போ என்ன நடந்திச்சு! அல்லா இருக்கான் எல்லா இடத்தையும் சல்லடையா தேட பிள்ளைங்க பேயிருக்காங்க. எல்லாம் ஹைரா முடியும் வாரகிழமை சம்ஹாட கல்யாணமும் நடக்கும்!” 

என தாய் மாமன் அஸ்லம் சொன்னது அந்த குடும்பத்திற்கு கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது. அந்த குடும்பத்தில் அவர் ஒரு கராரான தைரியமான செல்வாக்கு மிக்க பேர்வழி.

பள்ளியை அடைந்து சுபஹ் தொழுதுவிட்டு பக்கத்திலிருந்த சிறிய டீ கடையில் அமர்ந்து டீயை உறிஞ்சியவாறு ரெஷானும் ராசிக்கும் சம்ஹாவை தனியே சந்திக்க வியூகம் வகுத்தனர். 

” சரி இப்போ இதுதான் பிளான் நீ என்னோட பட்ச்மேட் வித் பிரண்ட் யூனியர் பட்ச் என்ற விதத்தில சம்ஹாவை நல்லாவே தெரியும் சோ ஒரு வேலயா பதுளை வந்தப்ப அவகிட்ட கொடுக்க நீ இந்த பொருட்களை தந்துவிட்டேன்னு சொல்லி நான் மட்டும் என்டர் ஆகிறேன். டைம் இடம்லாம் பேசி எடுத்திட்டு வாறேன். அதுவரை பொறுமையா இருக்கனும் பேபி! நீ ரூம்ல போய் குப்புற படுப்பியோ பள்ளியில தஸ்பீ மணி உருட்டுவியாே எனக்கு தெரியாது!” 

என நண்பன் ராசிக் கூற ரொஷானுக்கு அது சரியாகபட்டது.

மறுபக்கம் சம்ஹா வீட்டில் அஸ்லம் மாமாவின் மகன் அலி சப்ரி அந்த தகவலை அவரது காதில் மெதுவாக கூறினான். அவர்…. 

“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்” 

என கூறியவாறு. 

“ஏது பதுளை பொலிஸ்ல இருந்தா தகவல் வந்திச்சு?” 

என கேட்க…. 

” ஆமா வாப்பா ஹப்புத்தளை ரெயில்வே பொலிஸ் தான் மெசேஜ் அனுப்பியீர.”

என அலி சப்ரி சொல்லவும்… 

” ம்ம்ம் யாருகிட்டயும் மூச்சு விடாத! நான் பெய்த்து முதல்ல கண்பார்ம் பண்ணிட்டு வாறன்!” 

என அஸ்லம் மாமா புறப்பட்டதை கண்ட சம்ஹாவிற்கு மனதில் ஏதோ உறுத்தியது. மெதுவாக அவரது மகனின் அருகில் வந்து…. 

” சப்ரி மச்சான் ஏதாச்சும் தகவல் கிடைச்சா?” 

என கேட்க சற்று அவன் திகைத்தாலும் அதை சமாளித்தவாறு… 

” ஓ சம்ஹாவா!? இல்ல ஒன்னும் கிடைக்கல!” 

என விழுங்கியும் விழுங்காமலும் பதில் சொல்ல அவளுக்கு அது திருப்தியான பதிலாக இருக்கவில்லை.

தொடரும்…..

எம்.யூ.ஏ.ரஹீம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!