ஒரு வானவில் போலே - 01
தொடர் கதை பாகம் 01
Textile engineering முடிச்சிட்டு, நல்ல சம்பளத்தில கடந்த இருபது வருசமா நாலு Company களில தகுதியான job ல இருந்திருக்கேன். நல்ல பெயர், திறமை அப்படி இப்படின்னு நிறைய சம்பாதிச்சு இருந்தாலும் ஒரேயொரு கெட்ட பழக்கம்! அதாவது எந்த இடத்திலயும் நிரந்தரமா இருக்க விரும்பமாட்டேன். ஒரு புது Company ய தேடி போயிடுவேன். புது இடம் மாற்றம் புது வாகனம்…. இப்படி சிலது எனக்கு தேவைப்பட்டிச்சு. அம்மா அப்பா இருக்கு மட்டும் அவங்க விருப்பத்துக்காக அவங்கள பார்க்க அப்பப்ப யாழ்ப்பாணம் போயிட்டு வருவேன். அவங்க தவறின பிறகு போக விரும்பல. ஆனா மொரடுவ பகுதியில இருக்கிற தங்கச்சி குடும்பத்த பார்க்க சிலநேரம் போவதுண்டு. ஒரு வகையில என்னோட மனோ நிலைய ரொம்ப சரியா தங்கச்சி புரிஞ்சிருக்கிறதா இருக்கலாம்.
இப்போ என்ன பிரச்சினைன்னா நாலாவது Company பிடிக்காம ஒரு புது இடத்த தேடி போனப்ப மீரிகம பகுதியில ஒரு Garment factory யில production Manager Job ok ஆயிடிச்சு. Interview முடிச்சு agreement போட போனப்ப தான் ஏறத்தாழ 25 வருசத்துக்கு பிறகு மறக்க நினைத்தாலும் முடியாம என்னோட ஆழ் மனதில இருந்து என்னை குற்ற உணர்ச்சிக்கு உட்படுத்திற அதே முகத்தோட இன்னொரு print என் கண்ணுக்கு பட்டுது! அதாவது ‘கனவே கலையாதே’ படத்தில முரளிக்கு சிம்ரன் தெரிஞ்ச மாதிரியா இருந்தாலும்…. ஒரு சின்ன திருத்தம்… நான் நாற்பது அந்த பொண்ணு இருபதா இருக்கும். அதாவது என் இளமையின் பூங்காற்றை அஜந்தாவோடு சுவாசித்த நாட்களை அச்சொட்டாக நினைவு கூறும் முகம்! அதிர்ச்சி ஆச்சர்யம் இரண்டும் என்னை தாக்க அவளது முகத்தை ஆழமாக ஊடுறுவி பார்த்தேன்…. குறிப்பாக வலது பக்க நெற்றி ஓரத்தில் அந்த தழும்பு அடையாளம்.
ம்ம்ம் அதில்லை என புரிந்து நான் சுய நினைவுக்கு வந்த போதுதான் அவள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் “Sir anything problem?” என கேட்பது தெரிந்தது. நான் தமிழ் என்பதை புரிந்து சிங்களத்தை தவிர்த்து ஆங்கிலத்தில் பேசுகிறாள். அந்த pronounce தொடக்கம் சகலதும் அஜந்தாவை உரித்து வைத்திருந்தது. சிறு வயதிலேயே அஜந்தாவிடம் இருந்த அந்த ஆங்கில புலமையை பயன்படுத்தி அவளது எட்டு வயதில் எனது பத்துவயது seniority யை ஏளனம் செய்த அதே திறமை இவளிடமும் இருப்பது தெரிந்தது. “Nothing…go ahead” என்று எனது புதிய PA வான அவளிடம் சொல்லவும்…. ஒரு file னை என்னிடம் நீட்டி “Sir this is the hard copies of the daily planner” என அவள் சொன்ன போது… ம் கொட்டியவாறு அதை வாங்கியவாறு “your sweet name please!” என்றேன். ” Mathu Bashini Sir… Just call me Mathu” என்றவளிடம். “Ok Mathu… you can speak with me Singala too” என்றேன். “Ok Sir” என உதட்டோரத்தில் மகிழ்ச்சியா ஏளனமா என புரிந்து கொள்ள முடியாத அதே அஜந்தா style smile படர உண்மையில் குழம்பிப் போனேன். எனக்கு சிங்களம் தெரியும் என காட்டப்போய் ஆங்கிலத்தில் கொஞ்சம் டப்பா என புரிந்து கொண்டாளோ? என சந்தேகம் வந்தது.
தொடரும்…..
எம்.யூ.அப்துல் ரஹீம்