சில்லென்று ஒரு காதல் 01

சில்லென்று ஒரு காதல் 01

 

பாகம் 01


ஜன்னலை திறந்ததும் ஊசிப்பனி காற்று மெல்ல அவனது நாசித் துவாரங்களில் புகுந்து ஊடுருவியது. ஆனால் அவனது நெஞ்சில் அணல் விட்டு எரியும் குற்றத் தீக்கு முன் இந்த குளிரெல்லாம் எம்மாத்திரம்! மெதுவாக நடந்த நிகழ்வுகளை மறுபடியும் ரொஷான் நினைத்து பார்த்தான். ஒரு பெருமூச்சுடன் எட்டு வருடத்துக்கு முன்பு நடந்த கதையை தொட்டான்…. மனேஜ்மென்ட் பட்டதாரியான அவன் உயர்கல்வி என்ற ஒரே இலக்குடன் பயணித்து ஒரே தடவையில் பல்கலைக்கழகம் புகுந்தவன். அங்குதான் அவனது விதியின் இன்னொரு பக்கம் ஒரு பெண் ரூபத்தில் துரத்தியது! 

அங்கு இவன் இறுதி வருடம் படிக்கும் போதுதான் சம்ஹா முதலாம் வருடம் நுழைகிறாள். யதார்த்தமான வர்ணிப்புகளை தாண்டி இயல்பாகவே அவளோடிருந்த மெல்லிய புன்சிரிப்பு யாரையும் மிக வேகமாக கவரத்தக்கது. அதுதான் பெண்கள் விடயத்தில் ஆர்வம் காட்டாத ரொஷானையும் கவர்ந்தது. அதுவே ஒருமாதத்தில் அவனின் ஒரு தலைக் காதலுக்கும் காரணமாகியது.

இவ்வாறான எவ்வித சலனத்தையும் காட்டாமல் ஒரு சீனியர் என்ற மரியாதையுடன் அவள் பழகினாள். ஆனால் ரொஷானின் நண்பர்கள் தொடுத்த கிண்டல்கள் ஏதோ ஒரு புரிதலை அவளுக்கு கொடுக்க ஒரு நாள்…….

“நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒரு விஷயம் சொல்லனும்! அதாவது நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எத்தனையோ சிக்கல்களுக்கு மத்தியில இங்கு வந்திருக்கேன். இந்த இலட்சியத்த சிதைக்கிற மாதிரி எதையும் செஞ்சிக்க விரும்பல ப்ளீஸ் நாநா உங்க பிரண்ட்ஸ் கிட்ட அநாவசிய பேச்சுக்கள கொஞ்சம் நிறுத்த சொல்லுங்க!” 

என்று இவனிடமே கேட்டதன் மூலம் நாசூக்காக அவளது விருப்பமற்ற நிலையை சொன்னது, அவள் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக ஒரு மரியாதை கலந்த அன்பை இவனுக்குள் கூட்டியது. உடனே நண்பர்களை இவன் தடுத்தது அவளுக்கு பிடித்து போக அவளுக்குள் ஒரு அதிர்வலை மாற்றம்! ‘மைனஸ் இன்டூ மைனஸ் ஈகுவல் பிளஸ்’ என்பார்களே அதுபோல் நிகழ்வுகள் நடக்க இருதலை காதலாக அது மாறியது. 

எப்போதும் உணர்ச்சிகள் இலட்சியங்களை தோற்கடிப்பது ஒன்றும் புதிதில்லையே. அந்த தியறியை தகர்க்க இவர்கள் மலக்குகளா என்ன!? சராசரி திரைப்படங்கள் போலவே நஜீம் ஹாஜியாரோட மூன்றாவது பையன் ரொஷான் தெஹிவலை பகுதியில் ஹைகிளாஸ் ஏரியாவில் வீடு வாகனம் என அவன் இருந்தான். அவள் ஒரு நடுத்தர குடும்பம் தந்தை ஒரு சேர். பதுளையில் ஒரு ஸ்கூல் டீச்சர் என்ற சாதாரண பின்புலம். ஆனால் காதல் தான் முன்னால இருக்கிற சுவத்தையும் பின்னால இருக்கிற படு பாதளத்தையும் பார்க்காம சிக்னலை கண்டுக்காம ஓடுற வண்டியாச்சே! அதுக்கும் இவங்க விதிவிலக்கா? ஆனால் ரொஷானின் பைனல் எக்ஸாமுக்கு முதல் நடந்த அந்த நிகழ்வு இவங்க காதல் வாழ்க்கையில ஒரு பெரிய சவாலா அமைஞ்சிது. 

தொடரும்……

எம்.யூ.ஏ.ரஹீம்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
error: Content is protected !!